HARVEY MILLS CO- OP STORES -286
Harvey Mills Employees
Co- operative Stores Ltd.
ஹார்வி மில் தொழிலாளர் கூட்டுறவு பண்டகசாலை
குண்டூசி முதல் கம்யூட்டர் வரை,
மஞ்சள் தூள் முதல் அனைத்து மளிகைச் சாமான்கள் வரை,
ஆடைகள், அணிகலன்கள், அழகுசாதனப் பொருள்கள் வரை ஒரே இடத்தில் வாங்கும் சூப்பர் மார்கெட்டுகளும் ஷாப்பிங் மால்களும் இன்று இல்லாத நகரங்கள் இல்லை. இவையெல்லாம் பெரு முதலாளிகளுக்கு உரியவை.
ஆனால், தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத அளவுக்கு பிரமாண்டமான கட்டிட அமைப்புகளுடன் ஒரு பஞ்சாலைத் தொழிலாளர்களே இணைந்து நடத்திய கூட்டுறவு சூப்பர் மார்கெட் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது என்றால் அது எங்கள் விக்கிரமசிங்கபுரத்தில் 1940ல் நிறுவப்பட்ட மேற்படி நிறுவனமே ஆகும்.
1990 களுக்கு முன்பு அதிக அளவு தொழிலாளர்கள் தேவைப்படும் தொழிலாகப் பஞ்சாலைத் தொழில் இருந்து வந்தது. எட்டாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் நேரடியான வேலைவாய்ப்பைப் பெறும் நிறுவனமாக மதுரா கோட்ஸ் என்று பெயர் மாற்றம் கண்ட ஹார்வி மில் இயங்கி வந்தது.
இந்தத் தொழிலாளர்கள் அனைவருக்கும் தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள், துணி வகைகள், நாட்டு மருந்துப் பொருள்கள், பலவகையான நுகர் பொருள்கள் (FMCG) எலக்ட்ரிக் பொருள்கள், சைக்கிள் ஸ்பேர்ஸ், டயர் டியூப்கள், செருப்பு வகைகள், பட்டாசு வகைகள் என்று இங்கு இல்லாததே இல்லை என்கிற அளவுக்கு வெற்றி நடை போட்ட இந்த நிறுவனம் மூடப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேல் பிரமாண்டமான கட்டிடங்களுடன் செயலற்று ஆனால் தனக்குள்ள கவர்ச்சியை இழந்து விட்டாலும் கம்பீரத்தை இழக்காமல் ஊரின் ஒரு பகுதியில் அமைதியாக நிற்கிறது!
சில தினங்களுக்கு முன் அந்தப் பகுதிக்குச் செல்ல நேரிட்டது.
அடேயப்பா.. மாதத்தின் முதல் தேதி முதல் இருபதாம் தேதிவரையிலும் இங்கே இருந்த மக்கள் நடமாட்டம் என்ன! மக்கள் வாங்கிச் செல்லும் சாமான்களைச் சுமந்து செல்ல அணிவகுத்து நிற்கும் ஒற்றைக் காளை மாட்டு வண்டிகள் என்ன! பெற்றோருடன் வரும் பிள்ளைகள் அந்த ஐந்து ஏக்கர் நிலத்தில் ஓடியாடி விளையாடியதென்ன! சூழ நிற்கும் பன்னீர்ப்பூ மரங்களில் இருந்து எப்போதும் வீசம் மலர் வாசம் என்ன? காப்பிக்கொட்டை அரைப்பதெற்கென்று அமைந்த ஆலையில் இருந்து காற்றில் கலந்து வரும் அந்த மணம் என்ன! அக்கரா, அரத்தை, நறுக்குமூலம், சாரணவேர், சுக்கு திப்பிலி விற்குமிடத்தில் கிடைக்கும் ஆரோக்கிய மணம் என்ன! கருப்பட்டி, வெல்லம் விற்கும் பகுதியிலும் எண்ணெய் விற்கும் பகுதியில் உள்ள மணமும் இதுவரை நான் எங்கும் கண்டதில்லை, காணப்போவதுமில்லை!
இந்த நல்லெண்ணெயைச் சொல்ல வேண்டும்! களி கிண்டினால் நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிடுவதே வழக்கம். நெய் என்பது அபூர்வம். விளக்கு எரிக்க பின்னைக்கெண்ணெயும் ( இலுப்பையெண்ணய்) ஆமணக்கு எண்ணெயும் ( விளக்கெண்ணெய்) அவ்வளவு தரமாக இருக்கும்! அந்த எண்ணெய் வாசனையை இன்று நான் எங்கும் காண இயலவில்லை! கலப்படம்.. கலப்படம்!
அன்று இவ்வூர்ப் பெண்கள் பிரசவம் ஆனபிறகு சாப்பிட வைண்டிய பெற்றவளோ மற்றவளோ வீட்டில் தயாரித்துத் தரும் லேகியமும் மற்ற மருந்துகளும் இங்கு விற்கப்படும் நாட்டு மருந்துகளாலேயே தயாரிக்கப்பட்டன! வெளியூரில் இருந்தெல்லாம் இவற்றை வாங்குவதற்கு ஆட்கள் வருவார்கள்!
இந்த பண்டகசாலைக்குச் சொந்தமாக பெரிய அளவிலான அரிசி ஆலையும் எண்ணெய் ஆட்டும் ஆலையும் இருந்தன! பல நூறு பேருக்குப் பாதுகாப்பான நிரந்தர வேலைவாய்ப்பைத் தந்த அந்த ஆலைகள் (அம்பை- தென்காசி சாலையில்) இன்று தனது தோற்றங்களை இழந்து நிற்கிறது!
எங்கள் ஊரிலேயே ஒரு கி. மீ தொலைவில் கிளை ஒன்றும் இருந்தது! இந்த மூன்றும் உறுதியான கல் கட்டிடங்கள்! அவற்றில் படத்தில் காணும் கட்டிடம் மட்டுமே எஞ்சி காலத்தின் கோலத்தைச் சொல்லியபடி நிற்கிறது!
'All good things comes to an end'
என்பார்களே! அப்படித்தான் இதற்கும் நடந்து முடிந்தது!
நூற்றுக்கணக்கான பேர் வேலை பார்த்த இடம் இன்று மரங்களெல்லாம் பட்டுப்போய்- சில மரங்களைக் காணவில்லை- அவற்றின் ஊடே செல்லும் போது தலையில் எச்சமிடும் பறவைகள் - அவற்றையும் காண முடியவில்லை!
கூட்டுறவுத்துறைக்கே மாபெரும் எடுத்துக் காட்டாக விளங்கிய இந்த பண்டகசாலை தன் சோகத்தைச் சுமந்து நிற்கும் காட்சி காணச் சகிக்கவில்லை!
பில் போடுபவர்கள், சாமான்களைப் போடுபவர்கள், ஆலைகளில் வேலை செய்பவர்கள், தாணியங்களைப் புடைத்து சுத்தம் செய்யும் பெண்கள், அலுவலக எழுத்தர்கள், பியூன்கள், லாரி டிரைவர்கள், வாட்ச்மென் கள், லோடுமேன்கள் என்று எத்தனையோ பேர் பரபரப்பாக இயங்கிய கட்டிடம் இது!
சிலருக்கு சீருடை உண்டு. ஊருக்குள் ஸ்டோரில் வேலை செய்கிறார் என்றால் ஒரு மதிப்பு இருந்தது!
சிறுவனாய் இருந்த காலத்தில் இங்கு செல்ல வேண்டும் என்றால் அவ்வளவு உற்சாகம்! காரணம் க்ளாக்ஸோ பிஸ்கட் கிடைக்கும்! அன்று அந்த பிஸ்கட் மட்டுந்தான்! டின்களில் ஹை கவுண்ட் என்ற பொடி பிஸ்கட்டுகளும் உண்டு. இன்று கிடைக்கிற வெரைட்டி எவையும் அன்றில்லை. எங்களுக்குத் தெரிந்த சுவையின் உச்சம் அதுவே! ( மற்றொன்று பேரீச்சம் பழம்!)
ஒரு மாதத்துக்குத் எல்லாச் சாமான்களும் வாங்கி முடிக்க நான்கு மணி நேரம் கூட ஆகிவிடும்! சிறுவர்களுக்கு அது ஓர் பிக்னிக் ஸ்பாட்! மாடிப்படிகளில் ஏறி இறங்குவதும் ஓடுவதுமாக இருப்போம்!
எல்லாவற்றையும் மாட்டு வண்டியில் ( விறகு உட்பட) ஏற்றிய பிறகு அதன் மேலே வீடு வரைக்கும் சவாரி போவதென்பது அன்றைய பிள்ளைகளுக்குக் கொண்டாட்டமான விஷயம்! வண்டிக்காரர் பாரம் மிகுந்தால் பிள்ளைகளை வண்டியில் ஏற்ற மாட்டார்! அவர்களைச் சமாதானப்படுத்தி பிள்ளைகளைப் பெற்றோர் வண்டியில் ஏற்றியனுப்பிய காட்சியை இன்று நினைத்தாலும் கண்கள் குளமாகின்றன!
சாதாரண வாழ்க்கைதான். ஆனால் கடனில்லாத வாழ்க்கை! இன்றைய ஆடம்பரங்கள் எதுவும் அன்றில்லை. அத்தியாவசியங்கள் அத்தனையும் இந்தத் தொழிலாளர்களின் இல்லத்தில் நிறைந்திருந்தன! மணமாகி வெளியூர் செல்லும் தொழிலாளர்களின் பெண் மக்களுக்கு ஸ்டோரில் ( ஸ்டோர் என்றுதான் அழைப்போம்) வாங்கிய சாமான்களை அவ்வப்போது கொடுத்து அனுப்புவது வழக்கம். வாழ்க்கைப்பட்ட ஊரில் அதைப் பெருமையுடன் ' எங்க ஊர் ஸ்டோர் சாமான் மாதிரி வருமா' என்று சொல்லித் தன் தந்தையோ தமையனோ அனுப்பிய பொருள்களைப் பாசம் பொங்க விவரிப்பதும் எம்மூரில் பிறந்த பெண்மக்கள் பண்பு!
அறிஞர் அண்ணாதுரையுடன் பச்சையப்பா கல்லூரியில் பயின்ற பி. கன்னையாநாயுடு என்ற வழக்கறிஞர், சென்னையைச் சேர்ந்தவர். பணம் ஈட்டும் தொழிலான வழக்கறிஞர் தொழிலைத் துறந்து, விக்கிரமசிங்கபுரம் தொழிலாளர்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டார். அவருடைய முயற்சியினாலேயே இந்தக் கட்டிடங்களும் அரிசி, எண்ணெய் ஆலைகளும் உருவெடுத்தன. அன்றைய முதல்வர் பக்தவத்சலம் இதனைத் திறந்து வைத்தார்!
எங்கள் ஊருக்கும் அமரர் பி. ஏ. கன்னையா நாயுடுவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனால் இவ்வூர்த் தொழிலாளர்களுக்காகவே இங்கு பாபநாசம் தொழிலாளர் சங்கம் என்ற அரசியல் சாராத அமைப்பை ஏற்படுத்தித் தான் மறையும் வரையிலும் பாடுபட்டார். தொழிலாளர்களிடம் வாங்கும் சந்தாவைக் கொண்டே தமது சங்கத்துக்கென்று பல கட்டடங்களை வாங்கினார். தொழில் அணி என்ற பத்திரிகையையும் நடத்தினார். அதற்கென சொந்தமாக ஓர் அச்சகத்தையும் நிறுவினார். எதிலும் தற்சார்பு வேண்டும் என்கிற அவரது கனவால் உருவானதுதான் கூட்டுறவு பண்டகசாலை! அவர் நிறுவிய தொழிற்சங்கத்தின் முன்னால் அவருடைய வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறையினருக்கு அவர் யாரென்றே தெரியாதது பெரிய அவலம்!
அவருடைய தன் வரலாற்று நூல் தமிழகத்தின் தொழிற்சங்க வரலாற்றின் ஒரு பகுதியாகும்.
'வசை இலா வன்பயன் குன்றும்
இசை இலா யாக்கை பொறுத்த நிலம்'
இந்தக் கட்டிடம் ஒரு ஒதுக்குப்புறமாக இருப்பதால் அங்கு யாரும் செல்வதற்கு வாய்ப்பில்லை. இதை பதிவு செய்யும் முன்பு 38 வயதுடைய ஒரு நண்பரிடம் இதைப்பற்றிப் பேசிய போது, இதுவரையில் நான் அந்தக் கட்டிடத்தைக் கண்டதேயில்லை என்றார்! ( அவருக்கு மேற்கேயுள்ள கிளை கட்டிடம் தான் தெரியும். அவை தனியாருக்கு விற்கப்பட்டு இடிக்கப்பட்டு விட்டது!)
கிட்டத்தட்ட முப்பதாண்டு காலம் கழித்து அங்கே சென்ற என் காதுகளுக்குள் கடந்த காலத்தில் கேட்ட ஒலிகள் மீண்டும் நுழைந்தன. மகத்தான கட்டிடங்கள் தங்கள் மாட்சியை காலப்போக்கில் இழந்து சீந்துவாரின்றி தனித்திருக்கும் காட்சி அதனுடன் தொடர்பு உள்ளவர்களுக்குப் பெரும் துயரத்தை அளிக்கும் ஒன்று!
கனத்த மனதுடன் அகன்றேன்!
மா. பாரதிமுத்துநாயகம்,
விக்கிரமசிங்கபுரம்
The above is a Journey and Travel down the memory lane of one of the finest times thus far.. The Madura Coats ( Harvey Mills ) Co-operative Stores at Vickramasingapuram had an indelible part in all the Employees of this once famous establishment . In the Days and Months when MONEY was difficult to come bye , this STORE was a saviour as utilities and household items were given on credit and the amount collected later from our salaries , often in installments .
M Bharathy Muthunayagam ji has recaptured the glorious days of the past which was very much part of our lives . Thank you Sir , for taking us along with you in this Journey .
Comments
Post a Comment