THAI CINE s at VK PURAM -429

   THAI CINE s AT VICKRAMASINGAPURAM

I have very fond and lasting memories  of THAI CINES at Vickramasingapuram . This has been the place where Innumerable Movies with friends and later with family were seen and enjoyed before the advent of the digital era. 

My very own thoughts and feelings have been so beautifully penned by  : 

M Bharahymuthunayagam in his facebook post . He does deserve all the credit for a posting which is sure to bring back many a nostalgic memory of the good old days . Thank you Sir, 














'சிங்கை தாய் சினீஸ்'



ஒவ்வொரு ஊருக்கும் பெருமை சேர்க்கும் எத்தனையோ விஷயங்கள்  காலப்போக்கில் தங்களது முக்கியத்துவத்தை இழந்து போவதுண்டு. 


தாங்கள் வசிக்கும் ஊரை விட்டு அதிக தொலைவு போயறியாதவர்களுக்கு அந்த ஊரில் உள்ள பிரம்மாண்டத்தைப் பற்றிய பெருமை கூடுதலாகவே இருக்கும். 


அப்படிப்பட்ட ஒரு பெருமை வாய்ந்த ஒரு கட்டிடம் விக்கிரமசிங்கபுரம் ' தாய் ' திரையரங்கம்! 


1953 ல் திறக்கப்பட்ட இந்த திரையரங்கம் 68 ஆண்டுகளைக் கடந்தும் தனது கவர்ச்சியையும், உறுதியையும் இழக்காமல் இன்னும் ஊரின் நடுவே கம்பீரமாக நிற்கிறது! 


திரையரங்கத்தைத் திறந்து வைத்த பெருமைக்குரியவர் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்கள்! ( இந்தச் செய்தியை நினைவூட்டிய  கல்லிடைக்குறிச்சி திருவருள் லத்தீப் அவர்களுக்கு நன்றி. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தைப் பார்ப்பதற்காக பத்து கி. மீ. நடந்தே வந்திருக்கிறார்! அது ஒரு காலம்!) 


'தியேட்டர்' அல்லது ' டாக்கீஸ்' என்ற பெயர்களே திரையரங்கங்களுக்கு வைக்கப்பட்ட அந்நாளில் 

' சினீஸ்' என்று பெயர் பெற்றதே ஒரு நவீனம்தான்!


மாவட்டத் தலைநகரான நெல்லையில் இருந்து 45 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள இந்தத் திரையரங்கம் போன்று வேறெங்கும் இல்லை என்பது இதன் பெருமைகளுள் ஒன்று. 


இந்த ஊரின் பண்ணையார் திரு. சிவனுப்பாண்டியன். தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் ஸ்காட்லாந்து சகோதரர்களால் உருவாக்கப்பட்ட ஹார்வி மில்ஸ்( 1880) நிறுவனத்தாருக்கு அவர்களுடைய தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தின் அருகேயுள்ள பண்ணையாருக்குச் சொந்தமான நிலம் தேவைப்பட்டது. 


அந்த நிலத்துக்குப் பகரமாக வெள்ளையர்களால் டிசைன் செய்யப்பட்டு பண்ணையாருக்குக் கட்டிக் கொடுக்கப்பட்டதே இந்த ' தாய் சினீஸ்' திரையரங்கம்! 


அன்றைய காலகட்டத்தில் இவ்வளவு அகன்ற பெரிய திரையும், பால்கனியும் அமைந்த திரையரங்கங்கள் மாவட்டத்தில் வேறெங்கும் இல்லை! 


பத்து நாட்களுக்கு முன்னால் நான் சென்றபோது எடுத்துக் கொண்ட படங்கள் இவை. 


இன்று காலையில் இருந்தே கனமழை. திடீரென தியேட்டர் நினைவுக்கு வந்தது. 


இத்தனை ஆண்டுகள் ஆகியும் அன்றைய கான்கிரீட்டில் சின்னதாக விரிசலோ, நீர்க்கசிவோ எங்கேயும் காண முடியவில்லை! 


68 ஆண்டுகளுக்கு முன்னால் போடப்பட்ட மொசைக் தளமும், மாடிப்படிகளும், தூண்களும் கொஞ்சமாவது தன் பளபளப்பை இழந்திருக்க வேண்டுமே! 


ஆயிரக்கணக்கான மக்களுடைய காலடி பட்டு, தினமும் வந்து ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் செய்த கட்டிடம் கொஞ்சமும் தனது பொலிவை இழக்கவில்லை! 


படங்களைப் பாருங்கள்! 


சற்று நிறமிழந்து நிற்பது சீலிங் அட்டைகள் தான்! 


திரைக்கு இரு பக்கங்களிலும் இரண்டு பெரிய காட்சியறைகள்! ( Display Boxes) 


அவையிரண்டிலும் பண்ணையார் வேட்டையாடிய விலங்குகளைப் பாடம் பண்ணி வைத்திருந்தார்கள்! 


இரண்டு புலிகள், மூன்று சிறுத்தைகள், ஒரு கரடி என நீண்ட காலமாக அவை  அங்கே நின்றிருந்தன! 


 பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே அவை காணாமல் போய்விட்டன! 


ஹாலந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிலிப்ஸ் புரொஜக்டர்கள், மிகப்பெரிய ஜெனரேட்டர் என அமர்க்களமாக அமைந்திருந்தது தாய்சினீஸ்! 


மாலைக்காட்சி முடிந்தவுடன் இரண்டு பக்கங்களிலும் உள்ள கதவுகள் திறக்கப்பட்டு ரசிகர்கள் வெளியேறிய காட்சியைக் கண்டிருக்க வேண்டுமே! 


கோயில் திருவிழாக்கள், பண்டிகைகளைத் தவிர வேறெந்த பொழுதுபோக்குகளுக்கும் வழியில்லாத மக்களுக்கு மிகப் பெரிய அளவில் ஆசுவாசம் தந்த ஓரிடம் இந்த ' தாய் சினீஸ்'


ஓடிக்கொண்டிருக்கும் படத்தை தூக்கிவிட்டு , மற்றொரு படம் நாளை முதல் என்றால், 


' இன்றே கடைசி' என்று தியேட்டரின் முன் பக்கமிருந்த பெரிய சைஸ் காங்கிரீட் விளம்பரப் பலகையில் போஸ்டர் ஒட்டுவார்கள்!


இது எல்லா இடங்களிலும் ஒரு பேசு பொருளாகிவிடும்! 


' மகாதேவி' இன்றே கடைசி போட்டுட்டானாம்லா'


பள்ளிக்கூடம் வரும்  வழியில் என் நண்பன் ஒருவன் இதையெல்லாம் கவனித்துவிட்டே வருவான்! 


அவன் மூலமாக நாங்கள் செய்தியை அறிந்து கொள்வோம். 


இரவு எட்டு மணியளவில் புதிய படத்துக்கான போஸ்டர்கள் தியேட்டர் முகப்பில் ஒட்டப்படும். 


அதற்காகவே அங்கே ஒரு கூட்டம் கூடி நிற்கும்! 


" எம். ஜி. ஆர். படம் போட்டுட்டான்லா, அடுத்தது சிவாஜி படமாத்தான் இருக்கும்! "


என்று பேசிக் கொள்கிறார்கள்! 


கூடி நின்று வேடிக்கை பார்ப்பவர்களுக்கு வர்க்க வயது பேதமெல்லாம் கிடையாது. 


விஷயத்தைக் கேள்விப்பட்டு நானும் நண்பனும் போய் அரைமணி நேரமாக நிற்போம்! 


பாரிஜாதம் டிரான்ஸ்போர்ட் என்று நினைக்கிறேன். அந்தப் பஸ்ஸில்தான் படச்சுருள்கள் வைக்கப்பட்டிருக்கும் தகரப்பெட்டி வந்து இறங்கும். கூடவே போஸ்டர்களும்! 


தியேட்டர் ஊழியர் ஆவலுடன் கூடியிருக்கும் கூட்டத்தை விலக்கிக் கொண்டு பெட்டியைத் தூக்கிச் செல்வார்! 


அவர் ஏதோ ஆபரணப்பெட்டி சுமந்து செல்லும் தேவஸ்தான ஊழியர் போல மூஞ்சியை விறைப்பாக வைத்துக் கொண்டு கூட்டத்தைக் கடந்து செல்வார்! 


ஆவலை அடக்க முடியாமல் சிலர், என்ன படம் என்று கேட்பதுண்டு. 


அவர் ' ஒட்டும் போது பாத்துக்க' என்று சொல்லிவிட்டுப் போவார்! 


அந்த வழியாகப் போகும் முக்கியஸ்தர்கள் யாராவது கேட்டால், இன்ன படம் என்று சொல்லி விடுவார்! 


அது எங்கள் காதிலும் விழும்! 


மகத்தான ஒரு ரகசியத்தை அறிந்த மகிழ்ச்சியை அடைவோம்! 


உடனே ஒருவருக்கொருவர் அந்த ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டு உற்சாகம் அடைவார்கள். சீட்டியடிப்பவர்களும் உண்டு! 


இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படி நாளைக்கு என்ன படம் என்று நாங்கள் தெரிந்து கொள்ள முடியுமே தவிர, வீட்டுக்குத் தெரியாமல் நினைத்த மாத்திரத்தில் சினிமாவுக்குப் போய்விட முடியாது! 


மறுநாள் மாலை தியேட்டருக்குள் நுழைந்து, அன்றைய புதுப்படத்தின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பாக்ஸைப் பார்த்து மகிழ்வோம்! 


அவ்வளவுதான்! 


என் தந்தையார் என்னை அழைத்துச் சென்ற திரைப்படங்கள் மூன்று:


திருவிளையாடல், 

திருவருட்செல்வர், 

தில்லானா மோகனாம்பாள்! 


டிக்கெட் எடுப்பது ஒரு சாகசச் செயலுக்கு இணையானது! 


தனக்கு மட்டுமின்றி தெரிந்தவர்களுக்கும் டிக்கெட் எடுத்துக் கொடுப்பது மிகப் பெரிய புண்ணியம் என்பார் ரசிகர்! 


இன்று வீட்டுக்குள் அமர்ந்து கொண்டு ஹோம் தியேட்டரிலும், பயணம் செய்யும் போது கைபேசியிலும், ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தும் திரைப்படங்களைப்பார்ப்பவர்களுக்கு அந்த நாளைய அருமை தெரிந்திருக்க நியாயமில்லை! 


 படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது ரசிகர்களுக்குள் அடிதடி சண்டை அவ்வப்போது நிகழ்வதுண்டு. 


சண்டை சிறிதானால் ஓடிக்கொண்டிருக்கும் படத்துக்கு இடையூறு எதுவும் நேராது. 


வலுத்துப் போனால் படம் நிறுத்தப்பட்டு விளக்குகள் போடப்படும். 


இருட்டுக்குள் மோதிக் கொண்டவர்கள் இப்போது வெளிச்சத்தில் கூடுதல் ஆவேசத்துடன் கைகலப்பார்கள்! 


பெரும்பாலும் இரு தரப்பினரும் போட்டிருந்த சட்டையைக் கழற்றி விட்டே போர் புரிவது வழக்கம்! 


சண்டை போடுபவர்கள் இன்னார் என்று தெரிந்ததும் அவர்களுக்கு ஆதரவாக அவரவர் சாதியினர், தெருக்காரர்கள், உற்றார் உறவினர் கலந்து கொள்ள, பெண்கள் பகுதியில் உள்ளவர்கள் பயந்து போய் எழுந்து நிற்பார்கள்! 


இங்கு நடந்த சண்டை வெளியே போயும் பல நாட்களுக்குத் தொடரும்! 


எத்தனை ரசனையை வளர்த்து விட்ட இடம்! 


புராணங்களையும், சரித்திரங்களையும் கலைகளையும் கற்றுக் கொடுத்த இடம்!


காதலையும்தான்! 


அன்று ( கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு!)நான் சென்ற போது படம் பார்க்க வந்தவர்கள் எண்ணிக்கை நூறுக்குள்தான் இருக்கும்! 


மூன்றாவது தலைமுறையாக இப்போது நடத்திக் கொண்டிருப்பவர்கள் வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு தொடர்ந்து நடத்த முடியாது! 


கற்களால் அமைந்த வலிமையான காம்பவுண்ட் சுவரும் காலத்தின் அருமையைப் பறைசாற்றி நிற்கிறது. 


தியேட்டருக்கு மேற்கிலும் தெற்கிலும் தென்னந்தோப்பு! 


மரங்களைக் கடந்து நம் பார்வையில் எதுவும் படாது! 


இன்று பாதி மரங்களைக் காணோம்! 


மரங்களைப் போலவே மனிதர்கள் பலரும் மறைந்து போனார்கள்! 


நிற்கும் ஒன்றிரண்டும் இதோ அதோ என்று சாய்வதற்குக் காத்திருக்கின்றன! 


நண்பர்கள் ஒவ்வொருவராக என் நினைவுக்கு வந்தார்கள்! 


எத்தனை அருமையான அற்புதமான நாட்கள் அவை! 


இனிமையான அந்த அனுபவங்களைத் தந்த தாய்சினீஸ் திரையரங்கத்துக்கு எனது உளப்பூர்வமான நன்றி. 


மா. பாரதிமுத்துநாயகம்

I am now in Canada , fond memories of having seen many Movies in this Theater come to mind . Japan Balu , Kottaram , Solaippan , Ganapathy Sir and Family flash through my mind .

HAPPY BUT LOST MEMORIES 

Comments

Popular posts from this blog

AYODHYA YAATRA DAY 1 - 702

Ayodhya Yaatraa Day -3 - 704

VAIKOM VISIT- IN GODS OWN COUNTRY - 686