Kalyanamaam Kalyaanam - 666
KALYAANAMAM KALYAANAM
Not all might be in tune with the Dialect or the typical language used . What it does do is revive memories of good old days of a Ravanasamudram Agraharam Marriage . I have been witness to many such weddings during my school days . My own Wedding at a Bhajana Madam in Tuticorin in 1978 is a part mixture of both the OLD AND NEW .
( I must hasten here to add that the piece below in Tamil is NOT my original but one which I came across and thought of sharing with my friends in the group . )
# கல்யாணம் ஆகா கல்யாணம் #
பிராமணர்கள் கல்யாணம் இந்த நாளை விட அந்த நாட்கள்ளதான் சிறப்பாக கொண்டாடியிருக்கி றார்கள்.
1940 கால கட்டங்களில் 5 நாட்கள் கல்யாணம் கோலாகலமா நடக்கும். அந்த கால கட்டத்துல சத்திரமெலாம் கிடையாதே. தெருவில் பந்தலை போட்டு அந்த அக்ரஹாரத்துல உள்ளவாளோட அகங்களையெல்லாம் கல்யாண ஏற்பாடு பண்றவா உபயோகம் பண்ணிப்பா.
1970-களில் உள்ள கல்யாணங்களை பார்ப்போமா.
அப்ப பெண்ணாத்துலயோ, பிள்ளையாத்துலயோ கல்யாணம் நிச்சயம் ஆகிடுத்துன்னா தபால் கார்டு ஓரத்துல மஞ்சள் தடவி இரண்டு பக்கத்து சொந்தகாராளாத்துக்கும் உடனே தகவல் பறக்கும்.
இந்த காலம் மாதிரியா முகூர்த்த நேரத்துக்கு நெருங்கின சொந்தகாராளே வர மாதிரி.
ஆத்து வாசல்ல ஜலத்தை தெளிச்சு கோலத்தை போட்டா ஜே ஜேன்னு உறவுகாராள்ளாம் கூடிடுவா. அதுலயும் பெண்ணோட/பிள்ளையோட அத்தைகளும், மாமாக்களும் முன்னாடி வந்து நிப்பா.
கல்யாணத்துல இவாளோட சீர்தான ரொம்ப முக்கியம் , பந்தா அதவிட தூள் பறக்கும்
அதுலயும் பொண்ணோட அத்தை கடிதாசு கிடைச்ச உடனே அடுத்த ரயிலை பிடித்து ஆத்துக்குள்ள வரச்சயே அண்ணா நீ போட்ட கடிதாசு கிடைச்ச உடனயே ஆத்துல போட்டது போட்டபடி பறந்து வந்துட்டேன்.
நம்ப அம்மாவும், அப்பாவும் இருந்தா முதல் பேத்திக்கு கல்யாணம்னா எவ்வளவு சந்தோஷப்பட்டுருப்பான்னு கண்ணை தொடச்சுண்டு ஸ்வாதீனமா ஒரு மாசத்துக்கு முன்னாடியே வந்துடுவா.
இப்ப மாதிரியா அந்த கால கட்டத்துல ஸ்டார் கல்யாண மண்டபங்கள். ஒப்பந்த அடிப்படைல ஆட்கள்.
சீர் பக்ஷணங்கள் பண்றதுக்காகவே ஊர்ல இருக்கற அத்தை, மாமி, சித்தி, பாட்டி உறவுகளெல்லாம் கூடிடுவா.
பக்ஷணம், அப்பளம் பண்றச்சே அவா அடிக்கற கூத்தெல்லாம் பார்க்க கண்கள் கோடி வேணும்.
சாப்பாட்டு கடை ஆகியாச்சுன்னா கல்யாணத்துக்கு கடைசி 15 நாளைக்கு முன்னாடி வரைக்கும் கடைகளுக்கு போய் பாத்திரம் பண்டம், மளிகை சாமான்களுக்கு, துணிமணிகள் இத்யாதிகளுக்கெல்லாம் ஆத்துல உள்ள புருஷாளும், சொந்தகார மனுஷாளும் களத்துல இறங்கி வேலை செய்வார்கள்.
இந்த காலம் மாதிரி மாப்பிள்ளையாத்துகாராளுக்கும், அவா சொந்த/நட்புகளுக்கும் ஹோட்டல்ல அறைகள் போட மாட்டாளே. சுத்தி இருக்கற அக்கம் பக்கத்து மனுஷாளே தன்னாத்து கல்யாணம் மாதிரி அவா அவாளோட அகங்களையே சுத்தம் பண்ணி சந்தோஷமா கொடுப்பார்கள்.
நினைச்சு பார்த்தா கூட அந்த பொற்காலங்கள் திரும்பி வராதே.
கல்யாணத்துக்கு முதல் நாள் பிள்ளையாத்துகாரா பிள்ளைக்கு யாத்ரா தானம் பண்ணி முடிக்கற துக்குள்ள பொண்ணாத்துல வண்டி ஏற்பாடு பண்ணி அவாத்துக்கு இவா ஒரு தம்பதிகளோட அனுப்பி வச்சுடுவா. வெளியூரா இருந்தா ரயில்வே ஸ்டேஷனுக்கோ/பஸ் நிலையத்துக்கோ வண்டி அனுப்பிடுவா.
பிள்ளையாத்துகாரா சத்திரத்துக்கு வந்த உடனே மாப்பிள்ளைக்கு ஆரத்தி சுத்தி விரதத்துக்கு அழைச்சுண்டு போயிடுவா.
கல்யாண சமையல்லாம் காண்ட்ராக்ட் கிடையாதே. மளிகை, காய்கறிகள்ளாம் மொத்தமா வாங்கி வச்சு உக்கிராண அறையில் பத்திரமா வச்சு அதை பாத்துக்க பெண்ணாத்துல உள்ள உறவுகாராள்ளாம் மாத்தி, மாத்தி ட்யூட்டி போட்டுண்டு பரிஜாரகாளுக்கு வேணும்கறதை எடுத்து கொடுப்பார்கள்.
இதுக்கு அசாத்ய பொறுமை வேணும்.
கார்த்தால பிள்ளையாத்துலயும், பெண்ணாத்துலயும் விரதம் முடிஞ்சு சாப்பாடு ஆன பிறகு சாயந்திரம் நிச்சயதார்த்தம்தான்.
அந்த காலத்துல இந்த காலம் மாதிரி கல்யாணத் துக்கு முன்னாடி நிச்சயதார்த்தம்னா பெரிய ஹால்களில் வைக்கற பழக்கம் கிடையாது.
பிள்ளையாத்துலதான் பண்ணுவா.
அதுக்கு பெண்ணை கூட்டிண்டு போக மாட்டா. அத ஒப்புதல் தாம்பூலம்னுதான் சொல்லுவா.
கல்யாயாணத்துக்கு முதல் நாள் விவாஹ பத்திரிக்கை வாசிச்சு பண்றதுதான் ஒரிஜினல் நிச்சயதார்த்தம். அந்த கால கட்டத்துல ரிசப்ஷன் கூட ரொம்ப அத்தி பூத்தா மாதிரி மேல்மட்டத்துகாராதான் பண்ணுவா.
அதுவும் கல்யாணம் முடிஞ்சு சாயந்திரம்தான் வச்சுப்பா. நிச்சயதார்த்தம் முடிஞ்ச உடனே கோயிலுக்கு போய் அர்ச்சனை பண்ணிட்டு திறந்த கார்ல மாப்பிள்ளை ஜான்வாசத்துல வருவார்.
முன்னாடி நாதஸ்வர கச்சேரி, கேஸ் லைட்டோட கோலாகமா ஜான்வாசம் நடக்கும்.
நிச்சயதார்த்த விருந்து முடிஞ்ச பிறகு ஒரு பக்கம் சீட்டு கச்சேரி, இன்னொரு பக்கம் முகூர்த்த தேங்காய் பைகளை பொண்ணாத்துகாரா போட்டுண்டு இருப்பா.
அது மாதிரி பிள்ளையோட அத்தை, மாமா பண்ற ஜபர்தஸ்கள் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கும்.
அதுவும் பிள்ளையோட அத்தை, பெண்ணோட அம்மா, அப்பாட்ட இதோ பாருங்கோ மாமா எங்க பக்கத்து வயசான பெரியவாள்ளாம் காசிக்கு போயிட்டு வந்துருக்கா.
அவாளுக்கு சேஷமில்லாம மடி சமையலுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ.
அப்பறம் நானே உங்களன்ட கேக்கனும்னு நினைச்சேன். அது என்ன முகூர்த்த சாப்பாட்டுல இலைக்கு போட்ட குஞ்சாலாடு க்ருஷ்ண ஜயந்திக்கு உருட்டின உப்பு சீடை சைஸ்ல இருக்கே.
குழந்தை கையால குஞ்சாலாடை பிடிக்க சொன்னேளாக்கும்னு தோள்பட்டைல நக்குனு இடிச்சுப்பா.
பிள்ளையோட மாமா காபி கழனி ஜலமாட்டம் இருக்கு, வெத்தலை வாழை இலை சைசுக்கு இருக்குன்னு இடுப்புல உள்ள பஞ்சகச்சம் நழுவறது தெரியாம ஆகாசத்துக்கும், பூமிக்கும் தை தைன்னு குதிப்பார்.
இந்த களேபரங்களையெல்லாம் தாண்டி மறுநாள் காசியாத்திரைக்கு மாப்பிள்ளை மங்கள ஸ்நானம் பண்ணிட்டு
அத்தை கண்ணுக்கு மையிட்டு அலங்காரம் பண்ணி மாப்பிள்ளை மயில்கண் வேஷ்டி பஞ்சகச்சத்தோடு கையில் விசிறி, வேத புஸ்தகம் இத்யாதிகளோடு காசியாத்திரைக்கு புறப்படுவார்.
சுமங்கலி பொண்டுகள்ளாம் தசரத நந்தன தானவ மாதர பாடுவா. சாஸ்திரிகள் சொல்றதை பெண்ணோட தகப்பனார் மாப்பிள்ளையிடம் காசி யாத்திரை போகாதீங்கோ, எங்கள் குமாரத்தியை கன்னிகாதானம் பண்ணித்தரோம் அவளை பாணிக்ரஹணம் பண்ணிக்கனும்னு சொல்லி மாலை மாத்தற நிகழ்ச்சிக்கு அழைப்பார்.
இந்த மாலை மாத்தற சம்ப்ரதாய்த்துல பெண்ணையும், மாப்பிள்ளையும் மாமாக்கள் தூக்கிண்டு ஓடுவாளே அப்பப்பா செம கலாட்டாதான்.
பெண்கள்ளாம் சுத்தி நின்னுன்டு மாலை மாற்றினாள் கோதை மாலை சாத்தினாள், மன்மதனுக்கு மாலையிட்டாயேன்னு பாட்டுகளை பாடி கரகோஷம் பண்ணுவா.
இது முடிஞ்சு கன்னூஞ்சலில் பெண், பிள்ளையை உட்கார வைத்து பால், பழம் கொடுத்து பச்சைபிடி சுற்றி கன்னூஞ்சல் ஆடினாள் காஞ்சனமாலை மன மகிழ்ந்தாள், கந்த மலர் மீதுரையும் பாட்டுகளை பாடி மஞ்சன நீரை சுழற்றி ஹாரத்தி எடுத்து முகூர்த்த மேடைக்கு அழைத்து செல்வார்கள்.
பெண்ணுக்கு அப்பா மடில உட்கார வச்சு கூறைப் புடவையை கொடுத்து நாத்தனார் அவளை மடிசார் கட்ட அழைச்சுண்டு போவா.
பெண்ணை அப்பா மடில உட்கார வச்சுண்டு கன்னிகாதானம் பண்ணி கொடுக்கறச்சே அவரோட மடியை விட மனசு ரொம்ப கனக்கும்.
சும்மாவா விதையை இல்லை கன்னி என்னும் வ்ருக்ஷத்தையே வேரோட பெயர்த்து எடுத்து இன்னொரு குடும்பத்துக்கு கன்னிகாதானமா கொடுக்கறாரே.
இந்த கன்னிகாதானத்துலதான் கொடுக்கறவா கையும், வாங்கறவா கையும் சமமா இருக்கு. எந்த தானத்துக்கும் இல்லாத விசேஷம் கன்னிகானத்துக்கு மட்டும்தான் உண்டு. கொடுப்பவர்கள், வாங்குபவர்கள் இருவருமே சமமான பலனை அடைகிறார்கள்.
மாங்கால்யதாரணம், சப்தபதி சம்ப்ரதாயங்கள்ளாம் முடிஞ்ச உடனே இரண்டு பக்கத்து உறவு/நட்புகளெல்லாம் தம்பதிகளோட அம்மா, அப்பாவிடம் என்ன மாப்பிள்ளை வந்தாச்சா, மாட்டுப்பொண் வந்தாச்சான்னு சந்தோஷத்துல அவாளை ஆலிங்கனம் பண்ணிப்பா.
தாத்தா பாட்டிகள்ட்ட பேரன் ஆம்படையா வந்தாச்சா, பேத்தி ஆம்படையான் வந்தாச்சான்னு விஜாரிச்சு ஆசீர்வாதம் வாங்கிப்பா.
பாட்டி, தாத்தாக்களெல்லாம் இதை கண்ல ஆனந்த பாஷ்பம் பொங்க ஆனந்தமா ரசிச்சுண்டுருப்பா.
சப்தபதி ஆனபிறகுதான் எல்லாருமே ஓதியிட்டு ஆசீர்வாதம் பண்ணுவா. முகூர்த்த சாப்பாடு முடிஞ்சு
கிளம்பறவாளுக்கெல்லாம் தாம்பூல பை, சீர் பக்ஷணத்தோட மரியாதை பண்ணி விடை கொடுப்பா.
சாயந்திரம் நலங்கு கலாட்டா அமர்க்களமா இருக்கும். இரண்டு பக்கத்து மனுஷாளும் பாட்டு பாடியே சண்டை போட்டுப்பா.
பிள்ளையோட அத்தை கருநாகப் பழம் போல கருத்த பெண்ணுக்கு எலுமிச்சம் பழம் போல எங்காத்து பிள்ளைனு பாடுவா.
அதற்கு பதிலடி கொடுக்க பெண்ணோட மாமி உடனே எங்கள் சம்பந்தி சாப்பிடவே மாட்டாள் வெகு சங்கோஜகாரி இட்டிலியில் இருநூறும், ஜாங்கிரியில் முன்னூறும், மைசூர்பாகில் நானூறும், தயிர் வடையில் ஐநூறும் சாப்பிட என்று பதிலடி கொடுக்க சபையே அதிரும்.
அன்னிக்கு ராத்திரி மாப்பிள்ளைக்கு வெள்ளித் தட்டில் பால் சாதம் சாப்பிட சொல்லுவா. வெள்ளித் தட்டை அலம்பி வைக்கற மச்சினிக்கி பதில் சம்பாவனை பண்ணுவா. அப்ப பெண்ணோட அத்தை பெண்ணோட அம்மாட்ட காதுல மெதுவா சொல்லுவா.
காமு பாத்தியோன்னோ நம்ப இத்தனை சீரை பண்றோம். அது நொட்டை, நொள்ளைம்பா. ஆனா இவாளுக்கு மச்சினிக்கும், மச்சினனுக்கும் பதில் சம்பாவணை பண்றச்சே கை கரணா கிழங்கா போயிடும்னு மெதுவா நக்கலடிப்பா.
முகூர்த்தத்துக்கு அன்னிக்கு இரவே சாந்தி முகூர்த்தத்தை ஏற்பாடு பண்ணிடுவா. சோபன அறையை நன்னா பூஜோடனையால அலங்காரம் பண்ணி, மெல்லிய ஊதுபத்தி மணம், பால் பழம், பக்ஷண வகைகளோடு இந்திர லோகம் மாதிரி ஜோடனை இருக்கும்.
முதலில் ஒரு வயதான தம்பதிகள் படுக்கையில் சாஸ்திரத்துக்கு உட்கார்ந்து எழுந்திருப்பார்கள். அப்புறமா தம்பதிகள் சோபன அறைக்கு போன பிறகு வெளில பெண்கள் கூட்டமா ஒக்காத்துண்டு பள்ளியறை பாடல்களை பாடுவார்கள்.
மறுநாள் காலையில் மச்சினன் படுக்கையை சுருட்டின பிறகு படுக்கையின் அடியில் அவனுக்கு சீர் பணம் வைத்திருப்பார்கள். கார்த்தால பாலிகையெல்லாம் தெளிச்சு முளை விட்ட நவதான்ய கூடையை சுத்தி வந்து பெண்களாம் கும்மி பாட்டுக்களை பாடுவார்கள்.
இரண்டு நாள் விருந்து பலமா இருந்ததால கட்டுசாத கூடை சாப்பாடுக்கு முன்னாடி விருந்துல மிளகு குழம்பு, பருப்புத் துகையலோட பத்திய சாப்பாடு தேவாம்ருதமா இருக்கும்.
விருந்தெல்லாம் ஆனபிறகு சம்பந்தி மரியாதை முடிஞ்சு பெண் புக்காத்துக்கு புறப்படறச்சே பெண்ணோட அம்மா புடவை தலைப்பால முகத்தை மூடிண்டு அழறச்சே எல்லாருக்குமே மனசு கலங்கி போயிடும்.
அப்பாவுக்கு வார்த்தைகளை வெளிப்படுத்த முடியாம கண்ல ஜலம் பிரவாகமா இருக்கும்.
். அப்பதான் பிள்ளையோட அம்மா, பெண்ணை பெத்தவாகிட்ட மாமா, மாமி கல்யாணத்துல நாங்க ஏதாவது தெரியாத கோபத்துல பேசியிருந்தோம்னா எங்களை மன்னிச்சுடுங்கோ
எல்லாம் இவரோட உறவுகாரா சுபாவத்துக்காக த்தான் அப்படி நடந்துண்டோம்.
இனிமே உங்காத்து பொண்ணு எம் பொண்ணு மாதிரின்னு சொன்ன உடனே
மாமா, மாமி உடனே நன்னாருக்கு நீங்க சொல்றது கல்யாணம்னா இதெல்லாம் சகஜம்தான். இதுக்கு போய் மன்னிப்பு கேட்கறதாவதுன்னு அவாள சமாதனப் படுத்தி சந்தோஷமா வழியனுப்பி வைப்பா.
மிளகாய்பொடி இட்லி, புளியோதரை, தயிர்சாதம், வற்றல், வடாம், ஊறுகாய் கட்டுசாதங்களோடும், கறிகாய்கள், சீர் பக்ஷணங்களோட மாட்டுப்பெண் மணக்க மணக்க புக்காத்துக்கு வருவா.
அந்த கட்டுசாத கூடை இத்யாதிகள் இருக்கே. ஆஹா அது எந்த தேவலோக அமுதத்துக்கும் ஈடு இணையில்லை.
எனக்கு என்னவோ 1980 - 2000 வரை உள்ள கால கட்டத்துல உள்ள தம்பதிகளோட வாழ்க்கை அமோகமா இருந்துருக்குன்னு தோணறது.
கணவனும், மனைவியும் ஒத்தொருகொருத்தர் நன்னா புரிஞ்சுண்டு அனுசரணையா தாம்பத்யத்தை ரசிச்சு வாழ்ந்துருக்கா. இன்னும் வாழ்ந்துண்டும் இருக்கா.
மேலே குறிப்பிட்ட கல்யாணங்கள் மாதிரி இனிமே இந்த தலைமுறைகளில் நடக்குமா.
ஆடம்பரம் இல்லாவிட்டாலும் அமோகமா நிஜமான சுற்றமும்/நட்பும் சூழ நடந்த அந்த நாள் கல்யாணங்களை நினைத்துப் பார்த்தால் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், மறு பக்கம் நாம் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதை நினைதுப் பார்த்தால் மனம் வேதனைப்படுகிறது.
பசுமை மாறா நினைவுகள். ( shared)
Comments
Post a Comment