My Love With Railway Stations - 683

     MY LOVE WITH RAILWAY

                    STATIONS 








இரயில் நிலையங்கள் என்றுமே என்னை ஈர்ப்பவை. இதைத் தொடர்வண்டி நிலையம் என்று தமிழில் சொன்னாலும் பேச்சு வழக்கில் இரயில்வே ஸ்டேஷன்தான். அந்தக்காலத்தில் ரயில் கெடி என்பார்கள். 'ஸ்' உச்சரிக்க முடியாதவர்களுக்கு இன்றும் 'டேசன்' தான்!

இலங்கையில் 'புகையிரத நிலையம்!'


என்னை வசீகரிப்பவை சிற்றூரில் உள்ள நிலையங்கள்தான்!


வறட்சியான பகுதிகளில் கூட ரயில் நிலையங்கள் பசுமையாக மரங்களோடு காட்சி தரும்!


நீளமான நடைமேடை, அமர்ந்து கொள்ள தடித்தடியான சிமெண்ட் பெஞ்சுகள்! அவை அளிக்கும் சுகம் பஞ்சு மெத்தையில் கூட கிடைக்காது!


எல்லாவற்றுக்கும் மேலாக அங்கு இருக்கும் ஒரு அமானுஷ்யம்!

இரவு நேரங்களில் தொலைவில் தெரியும் மின்விளக்குகளில் ஒளிர்ந்து தொலைவில் இருளில் மறையும் நீண்ட தண்டவாளங்களைப் பார்ப்பதற்கே அச்சமாக இருக்கும்!


சிற்றூர் நிலையங்களில் பாசஞ்சர் வண்டிகள் மட்டுமே நிற்கும். பயணிகளும் குறைவாகத்தான் இருப்பார்கள். அமைதிக்குப் பங்கம் வரவே வராது!


சில நிலையங்களில் நூறாண்டு கண்ட ஆலமரங்கள் விழுதுகளை ஊன்றி விரிந்து நிற்கும். கருப்பு நிற இரும்புப் பட்டைகளைக் கொண்டு வேலி அமைத்திருப்பார்கள். இப்போதுள்ள காங்கிரீட்டுக்கு அந்தக் கவர்ச்சி இல்லை!


பெரும்பாலும் முன்னாலெல்லாம் வண்டி வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே நிலையத்துக்கு வந்து விடுவார்கள். ஊருக்குப் போகிறவர்களும் வழியனுப்ப வந்தவர்களும் உரக்கப் பேசி அரட்டை அடித்தாலும் அடுத்த பெஞ்சில் இருப்பவர்களுக்கு அவ்வளவாகக் கேட்காது.


பயணிகள் தவிர உள்ளூர் ஆசாமிகள்தான் தினமும் பொழுது போக்க நிலையங்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

இருட்டிய பிறகு ஏதோ ஒரு வண்டி வந்து பயணிகள் எல்லாம் வெளியேறிய பின்னர் சாகவாசமாக எழுந்து போவார்கள். பிளாட்பாம் டிக்கெட் எல்லாம் வாங்குவதும் கிடையாது; கேட்பதும் வழக்கமில்லை.


ரயில் சிநேகம் போல ரயில்வே ஸ்டேஷன் சிநேகமும் உண்டு. பெரும்பாலும் வழுக்கையுடன் நரை கூடி கிழப்பருவம் எய்தியவர்கள்தான்!


மனம் அமைதியற்ற நிலையில் பரபரப்பில்லாத ரயில் நிலையங்களில் உட்கார்ந்து பாருங்கள்!

விழித்தபடியே தியான நிலைக்குச் சென்று விடுவீர்கள்!

எழுந்து செல்லும் போது மன அழுத்தம் நீங்கிப் போவது நிச்சயம்!


காரணம்- பரந்து விரிந்த அந்த இடத்தில் நமக்கொரு தனிமை கிடைக்கிறது. யோசிக்க வைக்கிறது; நிதானத்துடன் எதையும் அலசிப் பார்க்கும் அவகாசம் நேர்கிறது!


கடற்கரையிலும் இது நிகழ வாய்ப்புண்டு. ஆனால் கடலலைகளும் தொலைவில் தெரியும் அடிவானமும் புள்ளிகளாய்த் தெரியும் படகுகளும் நம்மை ஒன்றுமேயில்லை என்று கலவரப்படுத்திக் கொண்டேயிருக்கும்! அதைக் கடந்து விட்டால் கடற்கரையும் ஒரு தியான பூமிதான்!


கேரளாவில் உள்ள ஒரு ரயில் நிலையம் செக்கச்சிவந்த மலர்கள் மண்ணில் விழுந்து கிடக்க ஏதோவொரு ஐரோப்பிய நாட்டிலுள்ளது போல மனதை மயக்குகிறது(படம்). வெளிநாட்டு நிலையம் என்று சொன்னால் நம்பும்படியாகவே இருக்கிறது! முகநூலில் கண்டெடுத்து.

(ஊர்ப் பெயர் மறந்துவிட்டது!)


எத்தனையோ நிலையங்களின் படங்களை நான் எடுத்து வைத்திருந்தேன். இடமின்மையால் அழித்து விடும்படி ஆனது.


எங்கள் ஊரில் ரயில் நிலையம் கிடையாது. எட்டு கி.மீ.தொலைவில் அம்பாசமுத்திரம்தான் எங்களுக்கான நிலையம்!


இந்தப் படங்களில் உள்ள இரவணசமுத்திரம் என் மனதுக்கு மகிழ்ச்சி தரும் ஒரு நிலையம். பாரதியின் மனைவி செல்லம்மாள் அவர்களின் பிறந்த ஊரான கடையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு ஒரு காலத்தில் சும்மாவேனும் போய் உட்கார்ந்தது உண்டு. (எங்கள் ஊர் 18 கி.மீ தெற்கில்)


நிலையத்துக்குள் கார் நிற்பது ராவி நதிக்கரையில் உள்ள பஞ்சாப் மாநிலத்திலுள்ள நிலையம். மற்றவை அழிந்து போயின. 


பச்சைப் பசேல் என்று பசுமை நிரம்பி வழியும் நிலையம் இரணியல். நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் 15 கி.மீ தொலைவில் உள்ளது. ஊரே அப்படித்தான் இருக்கும்! அந்தப் பகுதி மக்களுக்கு அதைப்பற்றிய பெருமிதம் இருக்கிறதே தவிர அதன் அபூர்வமான அழகு தெரியவில்லை! இங்கே சென்ற வருடம் சில மாதங்கள் இருந்தபோது அதன் சுற்றுப்புற அழகிற்காகவே போய் சில நேரங்களில் போய் வந்திருக்கிறேன்!


'தோட்டத்துப் பச்சிலைக்கு வீரியம் மட்டு'


கரி எரிவதால் மேலெழும்பும் கரும்புகை,

நீராவி வெளியேற்றப்படுவதால் வெளியேறும் வெண்புகை,

கனத்த கன்னங்கரிய ராட்சத உடல் இவற்றுடன் கூடிய நிலக்கரி ரயில்களுக்கு இருந்த கவர்ச்சி இப்போதுள்ள டீசல், மின் ரயில்களுக்கு இல்லை என்றாலும் ரயில்வே ஸ்டேஷன்கள் மீதுள்ள ஈர்ப்பு இன்னும் இத்தனை வயதிலும் குறையவில்லை!


நிலையங்களில் உட்கார்ந்து மனதுக்கு நெருக்கமான நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பதைப் போல வேறு சுகம் உண்டா!


சங்கரன்கோவில் நிலையத்தில் கரிசல் குயில் திருவுடையான், வழக்குரைஞர் பிருத்விராஜ், அருணாசலம் போன்றவர்களுடன் உரையாடிக் களித்த உல்லாசமான நாட்கள்!


இன்று நடைமேடைகள் நடைப்பயிற்சிக்கான களங்களாகி விட்டன!


காலையில் பார்க்க வேண்டுமே

அந்தக் கண்கொள்ளாக் காட்சியை!


அருகம்புல் சூஸோ பாகற்காய் சூஸோ

பாதாம் பருப்போ உலர் நெல்லியோ உட்கொண்டு வருவர்.


சிலருக்கு நேர்கொண்ட பார்வை. அக்கம் பக்கம் பார்க்க மாட்டார்கள்!

சிலருக்கு ஒவ்வொருவராக விஷ் பண்ணி ஷேமலாபம் விசாரிப்பதிலேயே பயிற்சி நேரம் முடிந்து போம்!


'அப்ப ராம்சாமி, டு மாரோ மீட் பண்ணுவோம் ' 

என்று கலைவார்கள்!

டு மாரோவும் இதே கதைதான்!


எங்கவீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போறாருங்கோ!


சிலர் குழுவாகப் பேசிக் கொண்டே நகர்வார்கள்; நடக்க மாட்டார்கள்!


சிலர் டவுசர் , டீ சர்ட், கேன்வாஸ் ஷு சகிதம் விரைப்பாக கைகளை ஆவேசமாக வீசி நடப்பார்கள். அவர்களுடன் நம்மைப் போன்றோர் இணைந்து நடத்தல் இயலாத ஒன்றாம்!

அது மட்டுமல்ல; அவர்கள் அனைவரையும் பார்க்கும் போது சைலேந்திர பாபு, பொன்மாணிக்கவேல் போல இருப்பார்களா, நெருங்கவே அச்சம்!

ஒரு சிலர் வீரப்பனைப் போல மீசை வைத்துக் கொண்டு வேட்டியில் வருவார்கள்.

அவர்களுடனும் யாம் போட்டி போடுவது இயலாத ஒன்றாம்!

அதிலொன்றும் நமக்கு அசூயை இல்லை!

ரசனை உண்டல்லவோ நமக்கு!

பின் ஏது அழுக்காறு!


நடந்து முடிந்த பின் கை கால்களை பாடாய்ப் படுத்துவார்கள்! எக்ஸஸைஸ்!


மங்கையர் சிலர் மணவாளனுடன் வருவர்;

சிலர் தோழியர் ஆயமுடன் கதை பேசிக் கடந்து செல்வர்.


மிக்ஸி ரிப்பேர், சமையலில் சாதித்தது,மெகா தொடர், மாமனார் மாமியார் தொந்தரவு இத்தியாதி.....


நடந்து கொண்டே நகைப்பதும் ஏதோ ஒன்றை மறுத்துப் பேசுவதையும் காணக் கண் கோடி வேண்டாம். இரண்டே போதும்!


வாக்கிங் போவதை வேடிக்கை பார்க்கவே சிலர் வாக்கிங் பயிற்சி மேற்கொள்வர். அத்தகையோர் கொஞ்ச தூரம் நடந்து விட்டு ஆங்காங்கே அமர்ந்திருப்பார்கள். மெயின் புள்ளி தன்னுடைய பயிற்சியை முடித்ததும் அவருடன் இணைந்து கொள்வார்கள் (வீடு திரும்பணுமே! அவர் பைக்கில் தான் இவர் வந்திருப்பார்!)


அண்மையில் கூட தென்காசி ரயில் நிலையத்தில் மணிக்கணக்காக எந்த நோக்கமும் இல்லாமல் அமர்ந்திருந்தேன். 

நகருக்குள் அமைந்துள்ளதால் அகலம் குறைவாக காட்சியளிக்கும் தென்காசியில் வேப்பமரங்களும் மேற்கில் இருந்து வீசும் காற்றும் ...

 அடடா....ஓ... அடடா!


பாரதியார்'ஆறில் ஒரு பங்கு' என்ற சிறுகதையில் தென்காசி சந்திப்பு நிலையத்தில் தொடங்குவார். இதுவரை படிக்காதவர்கள் கண்டிப்பாக படியுங்கள்.


எத்தனையோ நிலையங்கள்

எத்தனையோ மனிதர்கள்

அத்தனை பேரும்

தொலைந்தே போனார்கள்!

அவர்களுக்கும் நான்

தொலைந்து போனேனா?

தெரியவில்லை!

தொலைத்ததினால்

தொலைந்தவன் நான்

தொலைந்து போவதென்பது

தொடர்பு அற்றுப் போவது


தொடர்பு ஒத்துப் போகாதன

தொடர்பு அற்றுப் போய்

தொலைந்து போகும்

இதுவே இவண் நியதி!


தொல்லை ஒழிந்தது 

என்றும் கொள்ளலாமே!


என்னைத் தொலைத்த 

நானே என்னைத் தேடி

அலையும் போது

தொலைந்த என்னைத் தேட

 அவர்களுக்கு ஏது நேரம்!


ஆனால் ஒன்று மட்டும்

எனக்குத் தெரியும்


என்றாவது தொலைந்ததைத்

தேடும் போது நான் 

நினைவில் வருவதை 

அவர்கள் தொலைக்க முடியாது!


நாளுக்கு நாள்

தொலைத்தது கிடக்கும்

தொலைவு கூடிச் செல்கிறது


அதனால் நினைவில் மட்டுமே

இனி எதுவும் எப்பவும்!


தொலைவில் மினுங்கிய

சிவப்பு விளக்கு மறைந்து

பச்சை விளக்கு மின்னுகிறது!


எனக்குத் தெரியும் அது

எனக்கான அழைப்பு!

This is not my Original , I must confess , I can just about manage to write my name in Tamil , nothing beyond that ,  being a Railway Man ' s son possibly had a large  part to play in this  ,  I  liked the contents very much and  wanted this to be shared . The fact that the  picture perfect  Ravanasamudram my native place and Ambasamudram by inference ( 8 kms away from the locale of the original author ) and  my current place of stay finds mention in this narration  is also a reason for this share .


Comments

Post a Comment

Popular posts from this blog

AWARD OF EXCELLENCE IN CANADA - 642

On Northern Most Point Thus Far - 604

VAIKOM VISIT- IN GODS OWN COUNTRY - 686